கொழும்பு நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது, மைதானத்தில் இலங்கை அணியின் கப்டன் தசுன் சானகவும், பயிற்சியாளர் ஆர்தரும் சூடான வார்த்தைகளால் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8வது ஆட்டக்காரராக களமிறங்கிய தீபக் சஹரும், 9வது ஆட்டக்காரராக வந்த புவனேஷ்வர் குமாரும்தான்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது. ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்ளாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால், வெற்றி கைநழுவிப் போனது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து கடைசி 10 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து அணியை வெற்றியின் பக்கம் கொண்டுவந்தனர்.
தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இலங்கை அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், போட்டி முடிந்தபின் மைதானத்தில் நின்றிருந்த கப்டன் சானகவுடன் வந்து ஏதோ பேசினார். இருவருக்கும் இடையிலான பேச்சு சில வினாடிகளில் வாக்குவாதமாக மாறியது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சூடாகப் பேசியது அவர்களின் முகபாவனையில் தெரிந்தது.
அப்போது பயிற்சியாளர் ஆர்தரைப் பார்த்து கப்டன் சானக கோபமாக ஏதோ பேச, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.
Micky Arthur's coaching career is over. This is Not because of India's victory. But Becoz of his bad behaviour at Stadium after lose. #INDvSL
He argued with Captain at field pic.twitter.com/qmUFHidyla— Pradeep Krishnan (@pradeep_reports) July 20, 2021
இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் ஆர்னால்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இலங்கை அணியின் கப்டன் சானகவுக்கும், பயிற்சியாளர் ஆர்தருக்கும் இடையிலான வாக்குவாதம் ஓய்வறையில் நடந்திருக்கலாம். இப்படி மைதானத்தில் இருவரும் வாக்குவாதம் செய்ததைத் தவிர்த்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.