எச்.என்.டி ஆங்கில மொழிமூல மாணவர்களுக்கான பரீட்சையை உடனடியாக நடத்துமாறு கிழக்கு மாகாண மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
எச்.என்.டி பரீட்சை வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் வெளியானதாக மாணவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு முறையான விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு, ஆளுனர் அறிவுறுத்தியிருந்தார்.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை பரிசீலித்த ஆளுனர், புதிய பரீட்சையை நடத்தி, தெரிவு செய்யப்பட்டவர்களிற்கான நியமனத்தை 2021 ஒக்டோபர் 15 க்கு முன் வழங்குமாறு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
இந்த பரீட்சைகள் அனைத்தும் ஆங்கில மொழி மூலமே நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் பல வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஒரு வினாத்தாளை, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நியமிக்கும் குழுவொன்றின் மூலம் இறுதி வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.
மேலும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் எந்த அதிகாரிகளும் அல்லது அதன் ஊழியர்களும் வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்துப் பரீட்சை முடிவுகள் 2021.09.10 ஆம் திகதி வெளியிடப்பட வேண்டும் என்றும், செயன்முறை பரீட்சைகள் ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, முழு முடிவும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.