இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனை கேரள மாநிலம் திரிசூர் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக திரிசூர் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் கே.ஜே.ரீனா, “இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட கேரள பெண்ணுக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அறிகுறியற்ற கொரோனா நோயாளியாக இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
திரிசூரைச் சேர்ந்த மருத்துவ மாணவியான அவர், டெல்லிக்கு கல்வி நிமித்தமாக செல்ல நேர்ந்ததால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரது ஆன்டிஜென் பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்துள்ளது.
திரிசூரை சேர்ந்த இந்த மருத்துவ மாணவி சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். கடந்த ஜனவரி 30, 2020ல் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. திரிசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். பெப்ரவரி 20, 2020ல் அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் ஓராண்டுக்குப் பின்னர் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது.