கோவை கருமத்தம்பட்டியில் மதுபோதையில் இருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கருமத்தம்பட்டியில் இன்று காலை மது அருந்திவிட்டு இருவர் ரகளையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கும் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட முயன்றனர். இதனால் அவர்களை காவல் ஆய்வாளர் சண்முகம் மடக்கிப்பிடித்து எச்சரித்தார்.
அப்போது, நாங்கள் என்ன திருடர்களா? என எதிர் கேள்வி எழுப்பிய அவர்கள், போலீசார் விளம்பரத்திற்காக இத்தகைய செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். மேலும், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்களை கடத்தியதே தாங்கள் தான் என்று கூறி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்த போலீசார், இருவரையும் கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர்கள் கிட்டாம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன் என்பது தெரிய வந்தது.