உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியானதை தொடர்ந்து, சமூக இடைவெளியை மீறி விட்டதாக பிரித்தானியா சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரித்தானியா சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் (42) தனது நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பதை ஊடகமொன்று அம்பலப்படுத்தியது.
அலுவலகத்தில் மாட் ஹான்காக் நெருங்கிய உதவியாளர் ஜினா கொலடாங்கெலோவை (Gina Coladangelo) உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
இதனையடுத்து, மாட் ஹான்காக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பில் மாட் ஹான்காக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது அவரது நடத்தையை ஒப்புக் கொள்ளவோ இல்லை.
மாறாக, நான் சமூக இடைவெளி விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
மக்கள் எதிர்பார்த்ததை செய்யத் தவறியதன் மூலம் நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன், அதற்காக மிகவும் வருந்துகிறேன்.
கொரோனா தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பணியில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன் என மாட் ஹான்காக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படங்கள் மே 6 அன்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது – இங்கிலாந்தின் கோவிட் லொக் டவுனில் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்களின் உட்புற சமூகக் கூட்டங்களைத் தடைசெய்து, இரண்டு மீட்டர் இடைவெளி பேணுவது, நேருக்கு நேர் தொடர்பு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திய பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்த வீடியோ எப்படி எடுக்கப்பட்டது? அதிருப்தியடைந்த உதவியாளரால் எடுக்கப்பட்டதா? அங்குள்ள வேறு சாதனங்களில் இரகசிய கமரா பொருத்தப்பட்டிருந்ததா என்பது குறித்து ஸ்கொட்லாண்ட் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




