கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் பெறுமதியுடைய காணியை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சட்டதரணி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
கொழும்பு -7, W.W. கண்ணங்கர மாவத்தையில் அமைந்துள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு சொந்தமான 20 பேர்சஸ் காணியை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக முறையிடப்பட்டதை தொடர்ந்து, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் நேற்று புதன்கிழமை சட்டத்தரணி ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யதுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது காணியை விற்பனை செய்ததாக கூறப்படும் நபரையும் , அதனை விலைக்கு வாங்கிய நபரையும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்து, நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்ததுடன், சுமார் 50 கோடி ரூபாய் பெறுமதியுடைய காணியே சந்தேக நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விசாரணை தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பின்னர் போலி பத்திரத்தை சான்றளித்த சட்டத்தரணியை கைது செய்ய சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டது.
சிஐடியினர் நேற்று சட்டத்தரணியை கைது செய்தனர். அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.