திஸ்ஸமஹராம பகுதியில் சீன இராணுவத்தின் சீருடைகள் அணிந்தபடி வெளிநாட்டவர்கள் இருப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றிய மனுஷ நாணயக்கார, திஸ்ஸமஹராமவில் ஒரு திட்டத்துடன் இணைந்த தொழிலாளர்கள் சீன இராணுவத்திற்கு ஒத்த ஆடைகளை அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டதையும், இலங்கை சீன காலனியாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதன்போது விளக்கமளித்த அரச தரப்பு, கிமு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் திஸ்ஸமஹராம குளத்தை சுத்தம் செய்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் திட்டத்தில் வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தது.
முன்னதாக, இந்த சர்ச்சையை சிரச நியூஸ் பெஸ்ட் கிளப்பியிருந்தது.
“குளத்தை சுத்தம் செய்வதற்கான கூட்டு முயற்சியில் சீன இராணுவம் ஈடுபட்டுள்ளதா?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
இந்த சீருடைகள் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தில் வீரர்கள் அணிந்திருப்பதைப் போலவே இருப்பதாக செய்தியில் கூறப்பட்டிருந்தது.
செய்தி அறிக்கைக்கு பதிலளித்த கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஒரு படத்துடன் ட்வீட் செய்தது “பத்திரிகை உலகில் சரிபார்ப்பு மற்றும் உண்மைச் சரிபார்ப்பு இல்லையா? தவறான தகவல் ஒரு ஊடகத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும் ”. என குறிப்பிட்டுள்ளது.
Isn't the Verification and Fact-checking a MUST in the world of journalism? Clickbait or misinformation might only damage a media's credibility. https://t.co/w4SQ1TBdhm pic.twitter.com/hUpqMlqRQU
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 23, 2021
ஒன்லைன் சில்லறை தளமான அலிபாபாவில் இந்த ஆடைகளை வாங்கலாமென்றும் குறிப்பிட்டுள்ளது.
சீன தூதரகத்திற்கு பதிலளித்த நியூஸ் பெஸ்ட், “இலங்கை சட்டம் ஆயுதப்படைகளில் உறுப்பினராக இல்லாத எவரும் இராணுவ சீருடைக்கு ஒத்த எந்தவொரு ஆடையையும் அணிவதைத் தடைசெய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறது. இது சட்டவிரோதமானது! சீன பணியிடத்தில் இராணுவ உடையணிந்த வெளிநாட்டவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ”. என கேள்வியெழுப்பியுள்ளது.



