கோவை காந்தி மாநகர் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால், கணவன் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையின், யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக சென்ற நபரே இந்த கொலையை புரிந்தார். அவர் தலைமறைவாகி விட்டார்.
கோவை காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (32). ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்துவந்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்கிற லவேந்திரன் (49) என்பவரை கவிதா இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். லவேந்திரன் இலங்கைத் தமிழர். இவர் கோவையில் பழைய கட்டடங்களை உடைக்கும் பணி செய்துவருகிறார்.
இந்தத் தம்பதிக்கும் ஓர் குழந்தை உள்ளது. இந்தநிலையில், கவிதா அடிக்கடி போன் பேசுவதால், லவேந்திரன் ஆத்திரமடைந்து அவ்வபோது சத்தம் போட்டு வந்திருக்கிறார். இதனால், இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் (21) மாலை கவிதாவின் சகோதரர் நாகராஜன் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு கவிதா இல்லை.
லவேந்திரனிடம் கேட்டபோது, ‘போன் பேசாதேன்னு சொன்னதுக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டா. ஒரு வாரம் ஆச்சு. அவ வந்தா முடிச்சுக் கட்டிடுவேன்’ என்று கூறினாராம்.
இரவு அவர்கள் வீட்டில் கவிதா கதறும் சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு நாகராஜன் வீட்டுக்குள் சென்றபோது, கவிதாவை, லவேந்தரன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறார். கவிதா ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்திருக்கிறார்.
நாகராஜனைப் பார்த்தவுடன் லவேந்திரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து லவேந்திரனைத் தேடிவருகின்றனர்.