வவுனியா நடைபாதை வியாபாரிகளால் கொரோனா தொற்று பரவலடையும் நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், அரசினால் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை நேற்று விலத்திக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகருக்குள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் இருமரங்கிலும் மற்றும் கொறவப்பொத்தானை வீதியில் உள்ள நடைபாதைகளில் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களை வைத்து விற்பனை செய்துவரும் வியாபாரிகள் சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
இதேவேளை குறித்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை கொள்வனவுசெய்யும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை பேணாமல் நெரிசலான நிலமையை ஏற்ப்படுத்துகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே நகரசபை மற்றும் சுகாதாரபிரிவினர் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.