அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத அரச நிறுவனங்களின் பணியாளர்கள் அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணியாற்ற முடியாவிட்டால் மாத்திரமே அவர்களை இவ்வாறு சேவைக்கு அழைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவை ஒதுக்கப்பட்டுள்ளதால் சேவைக்கு அழைக்கப்படும் பணியாளர்களுக்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கான போக்குவரத்து வசதியை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனங்களும் குறைந்தப்பட்ச பணியாளர்களுடன் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முடிந்தளவில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் என வகைப்படுத்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சுகாதார வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத் திறனை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களையும் அதிகாரிகளையும் மட்டுமே அனுமதிக்க முடியும்.