மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கருவப்பன்சேனையில் உருக்குலைந்த நிலையில் உள்ள யானை ஒன்றின் சடலம் காணப்படுகிறது.
கருவப்பன்சேனையில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையிலேயே இவ் யானையின் சடலம் காணப்படுகிறது.
யானை இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதியன்று இவ் யானை இறந்துள்ளாகவும் அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த பிரதேசத்தினை சுற்றவரவுள்ள கிராமங்களான மதுரங்குளம், கட்டுமுறிவு, குஞ்சன் குளம் போன்ற கிராமங்களில் நோய்வாய்ப்பட்டு, உடல் மெலிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அலைந்து திரிந்ததாக அதனைக் கண்ட கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குளத்திற்கு அருகாமையில் யானையின் பழுதடைந்த உடல் காணப்படுவதனால் நீரில் அதன் எச்சங்கள் கலக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவ் குளத்து நீரினையே தாங்கள் குடிநீர் மற்றும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அவ்விடத்தில் இருந்து அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து தருமாறும் சம்பந்தப்பட்டோரை கேட்கின்றனர்.
இதேவேளை இப் பகுதியில் வேளான்மை செய்கை, மீன் பிடி, காட்டுத் தொழில் போன்ற வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலையும் இடம்பெறுவதாக கூறுகின்றனர்.
யானைக்கும் மனிதனுக்கும் இடையில் அடிக்கடி இடம்பெறும் மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
இம் மாதத்தில் வாகரை பிரதேசத்தில் இதுவரை 2 யானைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 3 யானைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.