மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகராசா கரிசனன் (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணி காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளது.
இதனால் கரையில் நின்ற நண்பனை நோக்கி, காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.
கரையில் நின்ற நண்பன், தோணியின் கயிற்றினை பிடித்து இழுத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவ இடத்தில் நின்ற அவரது நண்பன் தெரிவித்தார்.
தன்னால் காப்பாற்ற முடியாத நிலையேற்பட்டதும், அவர் அயலவர்களின் உதவியினை நாடியுள்ளார்.
அதற்குள் பயத்தின் காரணமாக தோணியில் இருந்தவர் ஆற்றில் பாய்துள்ளார்.
நீருக்குள் பாய்ந்தவரை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.