‘தோர்’ என்ற சிங்கம் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதை, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் உறுதி செய்துள்ளது. எனினும், வரிக்குதிரை குட்டி, நீர்யானையின் இறப்பிற்கு கொரோனா தொற்று காரணமல்ல என்பதையும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
தென்கொரியாவின் சியோல் மிருகக்காட்சிசாலையில் இருந்து தோர் சிங்கம் 2013 இல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள தோருக்கு 11 வயது.
கடந்த வாரம் ஒரு நாளில் சிங்கம் ஓரளவு சுவாசக் கோளாறு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் காட்டியது.
மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் காட்டப்பட்ட அறிகுறிகளுக்கு அமைய, சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. எனவே சிங்கத்திற்கு அன்டிஜன் சோதனை செய்யப்பட்டது. அதில் எதிர்மறை முடிவையே காண்பித்தது.
இருப்பினும், சிங்கத்தின் நோய் நிலையை உறுதி செய்ய பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் கொவிட் 19 தொற்றிற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைத்தது.
தற்போது, சிங்கம், மற்ற விலங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
‘மற்ற விலங்குகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
சிங்கத்திற்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்படுகிறது.
அத்துடன், நீர்யானையும், வரிக்குதிரையும் பிற காரணங்களினாலேயே உயிரிழந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.’