சட்டவிரோத மண்ணகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை ரிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவட்டித்திடல் பழைய கண்ணகி அம்மன் கோவில் அருகாமை குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது. அப்பகுதியில் சட்டவிரோதமாக மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த அதேவேளை, பல்வேறு தரப்பினருக்கும் பொது மக்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு கிராம சேவையாளர்கள் தமக்கு ஒத்துழைப்பதில்லை என இறுதியாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தெவானந்தாவுடனான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோத மண்ணகழ்வினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கிராம சேவையாளர்களிற்கும் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் குவிக்கப்பட்டு ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் கிராம சேவையாளர் ரி.கலைரூபனுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த அக்கிராமசேவையாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது சாரதி உட்பட 6பேர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேசிய கிராம சேவையாளருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த குறித்த குழுவினர், பின்னர் ரிப்பர் வாகனத்தினால் கிராம சேவையாளரை மோத முயற்சித்ததுடன், அச்சுறுத்தம் வகையில் நடந்த கொண்டதாக கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ரிப்பர் வாகனத்திற்கு அனுமதிப்பத்திரம் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும், அப்பகுதி மணல் அகழ்விற்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை எனவும் தெரிவிக்கும் கிராம சேவையாளர், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையுடன் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாகனத்தின் சாரதி ஒட்டுசுட்டான் பிரதேச த்தை சேர்ந்தவர் எனவும், தன்னை அச்சுறுத்திய குறித்த செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு்ம, தனது பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கிராம சேவையாளர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் இருவேறு அச்சுறுத்தலுக்கு ஏற்கனவே உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயலும் கிராம சேவையாளர்களிற்கு பாதுகாப்பு வழங்க தவறும் பொலிசார், மாவட்ட கூட்டங்களில் கிராம சேவையாளர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.