வடமாகாணத்தின் 4 மாவட்ட பொது மருத்துவமனைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடளாவியரீதியில் 9 மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் வருமாறு-
இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம்; திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.