கல்முனைப் பிரதேசத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.
நேற்று (01) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்து யூரியா உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அவ்விடத்திலேயே விவசாயிகள் வரவழைக்கப்பட்டு, பொறிக்கப்பட்ட விலைக்கே யூரியா உர மூடைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவருக்கு 3,500 ரூபாய்க்கு யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டிருந்த வேளையிலேயே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.