முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இச்சுவரொட்டியில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விரைவான விடுதலை கிடைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டியானது பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி ,இஸ்லாமபாத், சாய்ந்தமருது, மாளிகைக்காடு , நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், பொத்துவில், பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் கடந்த புனித ரமழான் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவருக்கு ஆதரவாகவும் விடுதலையை வலியுறுத்தியும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் செய்தியாளர் சந்திப்புகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.