எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கடந்த வாரம் நெருங்கிய தொடர்பை பேணிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் காணும் பணியில் தற்போது நாடாளுமன்ற அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாசவிற்கு தொற்று உறுதியானதும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாசா கடந்த வாரம் மூன்று நாட்களும் நாடாளுமன்றத்தில் இருந்தார். துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பில் 20 ஆம் திகதி வாக்களித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துவ பண்டார தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா 3வது அலையில் தொற்றிற்குள்ளாகும் 3வது நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஆவார். முன்னதாக, மருதபாண்டி ராமேஷ்வரன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர்.