யாழ்ப்பாணம், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமண சம்பந்த கலப்பு மற்றும் கூழ் காய்ச்சி குடித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோன அபாயத்தை கட்டுப்படுத்த சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவது கட்டாயமாக தடுக்கப்பட்டுள்ளன. அதை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துபசாரங்களில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படும் தகவல்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனினும், அடங்காத் தமிழர்கள் அதையும் மீறி நடந்து, எக்குத்தப்பாக மாட்டிக் கொள்வார்கள்.
அப்படியொரு நிகழ்வு காரைநகரில் நடந்துள்ளது.
நேற்று காரைநகரில் திருமண சம்பந்த கலப்பு ஒன்று இடம்பெற்றது. சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்காமல் இரகசியமாக இந்த சம்பவம் நடந்தது.
அதை தொடர்ந்து, அனைவரும் கூழ் காய்ச்சி குடித்தனர்.
தகவல் அறிந்து சுகாதார அதிகாரிகள் அங்கு சென்ற போது, அனைவரும் கூழ் குடிப்பதில் மெய்மறந்திருந்தனர்.
இவ்வாறு சுகாதார விதிமுறைகளை மீறி 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் கூழ் குடித்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 3 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கூழ் விருந்தில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 2 பொலிசாரும் கலந்து கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.