ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தளபதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசு தொலைக்காட்சியின் அரபு மொழி சேவையான அல்-ஆலம் வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் தலைவர் ஹனியேவும், குட்ஸ் படைத் தளபதி ஜெனரல் எஸ்மெயில் கானியுடன் தொலைபேசியில் உரையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு “தனித்துவமான மற்றும் வெற்றிகரமான பதிலை” வழங்குவதாக ஹமாஸை கானி பாராட்டியதாக கூறப்படுகிறது.
தெஹ்ரானின் பிராந்திய போட்டியாளரான இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் தமக்கு ஆயுதங்கள் மற்றும் உதவிகளை வழங்கியதற்காக ஹமாஸ் அதிகாரிகள், ஈரானை பாராட்டியுள்ளனர்.
இந்த வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ஆபத்தான போக்குக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
நேற்று சனிக்கிழமையன்று காசா நகரில் ஒரு உயரமான கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கட்டிடம் முழுமையாக அழிந்தது. இதில் அசோசியேட்டட் பிரஸ், அல்-ஜசீரா மற்றும் குவைத்தின் அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.