அண்மையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த ‘உரு ஜுவா’ என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் ‘கொஸ்கொட தாரக’ என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது-
இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சட்டத்திற்கு முரணாகத் தண்டனை வழங்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
பொலிஸ் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை முறையாகக் கவனிப்பதுடன் அவர்களை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பது, அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதை மறுதலிப்பதாக அமைகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது