பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் அண்மையில் கொல்லப்பட்டதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது. மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ மற்றும் தாரக பெரேரா விஜசேகர அல்லது ‘கொஸ்கொட தாரக’ ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நபர்களின் தன்மை மற்றும் அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மையின் தீவிரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தடுப்பு காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கும் காவல்துறைக்கும் இருக்க வேண்டும் என்பதை, சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மரணங்கள் நீதித்துறைக்கு புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டி, காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் அரசுக்கு அழைப்பு விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரக பெரேரா விஜசேகரவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) காவலில் இருந்து திடீரென பேலியகொட உள்ள ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், தனது வாடிக்கையாளர் காவலில் கொல்லப்படுவார் என்று அவர் அஞ்சுகிறார் என்பதை மே 12, 2021 அன்று மின்னஞ்சல் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருந்தார்.
இரவு 8 மணி முதல் 9 மணிக்கு இடையில் பொலிஸ்மா அதிபருக்கு igp@police.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தனது கவலைகள் குறித்து பொலிஸ்மா அதிபர், சி.ஐ.டி பணிப்பாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தெரிவித்திருந்தார்.
எனினும், தாரக விஜசேகர பேலியகொட சிறப்பு குற்றப்பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மே 11, 2021 அன்று மெலோன் மாபுலா (உரு ஜுவா) என்ற மற்றொரு சந்தேக நபரும் மரணத்தை இதேபோல் சந்தித்தார். அவர் இறப்பதற்கு முன்னர், அவரது பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அத்தகைய நபர்களின் தன்மை மற்றும் அத்தகைய நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் தன்மையின் தீவிரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தங்கள் காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ளது.
இத்தகைய மரணங்கள் நீதித்துறைக்கு அவமரியாதை ஏற்படுத்துவதுடன், இலங்கையின் பிம்பத்தை கெடுக்கும். கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவிய வலையமைப்புக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அகற்றப்படுவதும் குற்றவியல் நீதிக்கான கட்டாயத் தேவையாகும்.
பல சந்தர்ப்பங்களில் நிராயுதபாணியான சந்தேக நபர்களை காவல்துறையினர் தங்கள் காவலில் வைத்திருக்க முடியவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது.
பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட காவல்துறையினர் தங்கள் காவலில் உள்ள நபர்களைப் பாதுகாக்கத் தவறியதைக் கண்டிக்கிறது.
இந்த சம்பவங்களை தீவிரமாக கவனிக்கவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளது.