கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது, மக்கள் நீதி மய்யத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பயணித்த துணைத்தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் இன்று முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபுவும், பத்மபிரியாவும் விலகியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். இரு கட்சிகளுக்கும் மாற்றாக தனது கட்சி இருக்கும், ஊழலுக்கு எதிராக, நேர்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கட்சி இயங்கும் என அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்தில் ஓய்வு ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இணைந்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அதில் நகர்புறத்தில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப்பெற்றது. ஆனாலும் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை. அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.
மக்கள் நீதி மய்யத்தில் ஏராளமான இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டுக்கட்சிகளையும் குறிப்பாக திமுகவை அதிகம் விமர்சித்து கமல் ஹாசன் பிரச்சாரம் செய்தார். திமுக, அதிமுக எனும் இரு கட்சிகளுக்கிடையேயான போட்டியில் மக்கள் நீதிமய்யம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை. ஒவ்வோரு தொகுதியிலும் நான்காவது இடத்தில் வாக்குகளைப்பெற்றாலும் தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.
இதனால் மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் தலைமையில் ஜனநாயகம் இல்லை என முக்கிய தலைவரான மகேந்திரன் பேட்டி அளித்து விலகினார். துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள், களையே தன்னை களையெடுத்துக்கொண்டது என கமல் அறிக்கை விட்டார். இன்னும் பலர் தன்னை தொடர்ந்து வெளியேறுவார்கள் என மகேந்திரன் கூறியிருந்தார்.
இதனிடையே கட்சி நிர்வாகிகளை பதவி விலக கமல் கட்டளையிட்டதை அடுத்து அவர்கள் பதவி விலகினர். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார். சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விலகலுக்கு சொந்தக்காரணம் என்று தெரிவித்துள்ளார். கமலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
பத்மபிரியா விலகல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவர் விலகலுக்கு கமல் தரப்பிலிருந்து இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லை.