கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (10) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து கைச்சாத்தானது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் அவர்களும், கல்முனை மாநகர சபை சார்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் அவர்களும் இதில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை மாநகர எல்லை பிரதேசங்களிலுள்ள உணவகங்கள் மற்றும் ஏனைய உணவு சார் உற்பத்தி நிலையங்களிலும், பொதுமக்கள் உணவு பாதுகாப்பு விடயங்களிலும், இருசாராரரும் இணைந்து பணியாற்றுவது என்றும் திண்மக்கழிவகற்றல் போன்ற பொதுமக்கள் சுகாதார விடயங்களிலும் ஆளணி மற்றும் வளங்களை பரிமாறி கொள்வது என்றும் புரிந்துணர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலமாக நஞ்சற்ற உணவு, நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை முறையற்ற விதத்தில் வீசுதல் தொற்றுநோய் கட்டுப்பாடு, தொற்றா நோய் கட்டுப்பாடு, வியாபார நிலையங்களை கண்காணித்தல் போன்றவற்றை கல்முனை மாநகர சபை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஊடக சேவைகள் வழங்கப்படுமென இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், ஆகியோருடன் இணைந்து மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சத் காரியப்பர், பிராந்திய தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் என். ரமேஷ், ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.