பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியால் நேற்று (9) மாலை சந்தேக நபர் வட்ட வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் இருந்து இவ்வாறு 590 போதைமாத்திரைகளை கடத்தி தற்போது கைதானவர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர் எனவும் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதை அடங்கிய மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இச்சுற்றிவளைப்பின் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபல்களான செலர்( 40313 ) , ரதீஸ்குமார்( 89382 ), நிமால் (81988), போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களான , பண்டார (51423) ,அதிகாரி(47526) , அமரசிங்க (74645) ,பொலிஸ் சாரதி ரெஜிபவன்(3893) ,மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் றிஹால் (6045)ஆகிய பொலிஸ் குழுவினர் இத்தேடுதலில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 590 போதை மாத்திரகள் மற்றும் ஹெரோயின் மற்றும் சந்தேக நபர் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய வட்டா ரக வாகனம் என்பன கல்முனை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.
-பா.டிலான்-