பச்சைமரத்தை அடியோடு தறிக்க முற்பட்ட அரச மரக்கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், குறித்த இரண்டு மரங்களும் காய்ந்தமரம் என சான்றிதழ் வழங்கிய ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் செயற்பாடு தொடர்பில் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி இந்து வித்தியாலயம் முன்பாக காணப்பட்ட இரண்டு வீதியோர மரங்களே இவ்வாறு அடியோடு வெட்டி சரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அரச மரக்கூட்டுத்தாபனம் என தங்களை அடையாளப்படுத்தியவர்களின் கண்காணிப்பில் தனிநபர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டு குறித்த இரண்டு நிழல்தரும் மரங்கள் அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நடவடிக்கை பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் தடுக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை அடுத்து இடைநடுவில் குறித்த நடவடிக்கையை அரச மரக்கூட்டுத்தாபனம் கைவிட்டுள்ளது.
குறித்த இரு மரங்களும் பட்ட மரங்கள் எனவும், அதனை அகற்றி தருமாறும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.அகிலனினால் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது 13.01.2021 அன்று அரச மரக்கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண பிராந்திய முகமையாளரருக்கு பிரதேச செயலாளர் ரி.அகிலனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில், அக்கராயன் வீதியில், திருமுறிகண்டி பாடசாலை, முன்பள்ளி மற்றும் இலங்கை வங்கி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஒதுக்கீட்டு பகுதியில் இரண்டு இயவாகை மரங்கள் பட்டுப்போய் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், அதனை வெட்டி அகற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கொரிக்கை கடிதத்தின் ஊடாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.அகிலனால் கோரப்பட்டுள்ளது,
அதற்கு அமைவாக அரச மரக்கூட்டுத்தாபனம் இன்றைய தினம் குறித்த மரத்தினை அகற்றவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த மரத்தினை அகற்றுவதால் சூழல்சார் பாதிப்புக்களை தாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் இளைப்பாறக்கூடிய வகையில் காணப்படும் குறித்த மரத்தை அகற்ற வேண்டாம் எனவும் பிரதேச மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்த குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இயற்கையை பாதுகாத்தல் மற்றும் இயற்கையான சூழலை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பட்டு வருகின்றது. குறித்த வேலைத்திட்டமானது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இயற்கையை பாதுகாக்க வேண்டிய இரு அரச திணைக்களங்கள் இவ்வாறு தவறான தகவல்களுடனான சான்றிதழ்களை பெற்று, சுற்று சூழலை அழிக்க முற்படுவதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இரண்டு மரங்களும் எந்தவொரு இடையூறும் இல்லாது காணப்படும் அதேவேளை, மக்களிற்கு நிழல்தரும் வகையில் செழித்து காணப்படும் சூழலில், அது பட்ட மரம் என சான்று வழங்கி அதனை அகற்ற பிரதேச செயலாளர் ரி.அகிலன் எடுத்த முயற்சி தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு, கள நிலைமைகளை ஆராயாது, எழுமாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதானது எதிர்காலத்தில் இயற்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும், குறித்த பொய்யான விடயத்தை குறிப்பிட்டு இரு மரங்களையும் அகற்ற முற்பட்ட இரு அரச ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகை விடுத்துள்ளனர்.