திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் மஞ்சள் நலுங்கு நிகழ்வில், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, மணப்பெண் எழுந்து சென்று விட்டார். நலுங்கு விழாவில் முகம் முழுக்க பூசிய மஞ்சளை அழிக்காமல் இப்போதும் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருக்கிறார் புதுமாப்பிள்ளை.
மணமேடைக்கு வந்து மணமகனை ஏமாற்றிய பெண் பற்றி செய்திகள் இப்போது வைரலாகி வருகின்றன.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும், குஷ்மாவிற்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்தது. ஏழை வீட்டு பெண்ணாக இருந்தாலும் அழகாக இருந்ததால் குஷ்மாவை மணப்பதற்காக ஹரிபிரசாத் வீட்டார் சில தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமும் 13 சவரன் நகையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
திருமணத்துக்கு முந்தைய நாளன்று மஞ்சள் நலுங்கு செய்யப்பட்டது, மணமேடையில் மணமகனும், மணமகளும் முகமெல்லாம் மஞ்சள் பூசி அமர்ந்திருந்த நிலையில் மணமகனிடம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக கூற, மணமகன் ஹரிபிரசாத்தோ பரவாயில்லை என்று கூற மணமேடையில் இருந்து எழுந்துசென்றுவிட்ட குஷ்மா, தனது தயாருடன் ஆட்டோவில் ஏறிசெல்ல முயன்றார்.
அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற மணப்பெண் தனக்கு, கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வந்துள்ள நிலையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார் அளித்தார். அங்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் நகை பணத்தை வாங்கிக் கொண்டு தாயும் மகளும் கொரோனா நாடகமாடுவதாக தெரிவித்தனர்.
மணப்பெண்ணிற்கு கொரொனா பாசிடிவ் என்ற தகவல் தெரிந்த நேரத்தில் இருந்தே பீதியுடன் காணப்பட்ட போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டுவதில் குறியாக இருந்தனர்.
தர்மபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நகை பணம் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும், மணப்பெண்ணுக்கு விருப்பமில்லா திருமணத்தை தங்களால் நடத்தி வைக்க முடியாது என்றும் கறாராக கூறி விரட்டினர். கண்ட கனவெல்லாம் கலைந்து போன விரக்தியில் தங்கள் நிச்சயதார்த்த புகைபடங்களையும் வீடியோக்களையும் காண்பித்து வீதியில் நின்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார் புதுமாப்பிள்ளை ஹரிபிரசாத்
ஆனால் கடைசி வரை ஒருவர் கூட அந்த பெண்ணிடம் கொரோனா பாசிடிவ் என்று கூறியதற்கான ஆதாரத்தை கேட்கவில்லை என்பது தவிப்புக்குள்ளான புது மாப்பிள்ளையின் ஏக்கமாக இருந்தது. அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்னர் மாப்பிள்ளையை விட்டு பிரிந்து சென்றிருந்தால் மாப்பிள்ளையின் வாழ்க்கையே வீணாகி இருக்கும் என்ற அளவில் மாப்பிள்ளை வீட்டார் திரும்பிச்சென்றனர்.