நெல்லியடி பொலிஸ் பிரிவில் குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்று பாலியல் சித்திரவதை புரிந்த காமுகர்கள் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வடக்கை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருக்கலாமென்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் காதல் விவகாரம் ஒன்றை தொடர்ந்து பெண்ணும், அவரது மகனும் கடத்தப்பட்டதாக தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
கரணவாய் கிழக்கை சேர்ந்த காதல் ஜோடியொன்று வீடுகளை விட்டு வெளியேறி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தது. இதை தொடர்ந்து இரு வீட்டாரும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, அந்த ஜோடி சட்டபூர்வமாக இணைத்து வைக்கப்பட்டது.
அதன்பின்னர் ஊர் திரும்பியதும், யுவதியின் தாய், சகோதரணை, காதலனின் உறவினர்கள் தரப்பினர் கடத்தியுள்ளனர். காதல் ஜோடியின் தற்போதைய இருப்பிடத்தை அறியவே கடத்தல் நடந்தது.
எனினும், தகவலறிந்த பொலிசார் கடத்தல் நடந்த சிறிது நேரத்திலேயே, காதலனின் வீட்டில் வைத்து கடத்தப்பட்ட சிறுவனை மீட்டனர்.
சிறுவன் அடித்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சகோதரியின் இருப்பிடம் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதியின் தாயாரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.
கட்டுமானம் மற்றும் பளையில் தும்பு தொழிற்சாலை நடத்தி வரும் நெல்லியடி, அரசடி பகுதியை சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி. அவரின் கீழ் பணிபுரியும் கும்பலொன்றே இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது. அந்த கும்பல் போதைக்கு அடிமையான கும்பலாக இருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.
புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபரொருவர் தற்போது நெல்லியடியில் இரண்டாவது திருமணம் முடித்து தங்கியுள்ளார். சம்பவத்தின் இரண்டாவது சூத்திரதாரியாக அவர் கருதப்படுகிறார். அவரும் தலைமறைவாகியுள்ளார்.
காணியொன்றிலும், வீடொன்றிலும் யுவதியின் தாயாரை தடுத்து வைத்து பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளனர்.
கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில், காதலனின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் சிற்றூழியராக கடமைபுரிவதாக கூறப்படுகிறது.
இந்த கடத்தல் நடந்து ஒரு வாரமாகியும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமலிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.