வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதார பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்கும்,சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு கடந்த இருதினங்களிற்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை.இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது.
இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கச் சென்ற சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த உணவகத்தின் ஊழியர்கள் சிலர் முரன்பட்டிருந்தனர். இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஐந்து பேர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.