போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஐந்து பேர் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு- அக்கரைப்பற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடாத்துனர் ஒருவரும் இதிலடங்குவதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் நடாத்துனரிடமிருந்து 4320 மில்லி கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதனால் இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் பஸ்தரிப்பிடத்தில் நின்ற இரு நபர்களை சோதனையிட்டபோது கேரள கஞ்சா ஒருவரிடம் 390 மில்லிகிராமும் மற்றவரிடம் 660 மில்லி கிராமும் அடங்கிய பொதிகள் காணப்பட்டுள்ளன.
இதேவேளை விசேட சோதனையின்போது ஒரு நபரிடம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் இன்னுமொருவரிடம் 460 மில்லி கிராம் ஹெரொயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நால்வரும் ஏறாவூர் சுற்றலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.