வடமராட்சியில் அண்மையில் கடத்தப்பட்ட குடும்ப பெண், மிக மோசமான துன்புறுத்தலுக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிழக்கு பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. காதல் விவகாரத்தை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த தாயும், மகனும் கடத்தப்பட்ட செய்தியை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
கடந்த 25ஆம் திகதி 55 வயதான தாயும், 14 வயதான மகனும் கடத்தப்பட்டனர். அன்றைய தினமே, வீடொன்றில் வைத்து சிறுவனை நெல்லியடி பொலிசார் மீட்டனர். மறுநாள் அதிகாலை 1.30 மணியளவில் நெல்லிய நகரப்பகுதியில் தாயாரை கடத்தல்காரர்கள் இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காதல் விவகாரம் ஒன்றை தொடர்ந்தே இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.
கரணவாய் கிழக்கை சேர்ந்த யுவதியொருவரும், இளைஞரும் காதலித்து வந்தனர். சமூக வேறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களினால் இளைஞனின் பெற்றோர் காதலிற்கு சம்மதிக்கவில்லை.
இதையடுத்து இளைஞனும், யுவதியும் அண்மையில் வீட்டிற்கு தெரியாமல் திருகோணமலைக்கு தப்பிச் சென்று, திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இளைஞன், யுவதியின் பெற்றோர் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, அந்த ஜோடி சட்டபூர்வமாக இணைத்து வைக்கப்பட்டது. இளைஞனின் பெற்றோரும் ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். எனினும், திருமணத்தின் பின் ஊருக்கு அழைத்து சென்று பிரித்து விடுவார்கள் என அஞ்சிய ஜோடி, இளைஞனின் பெற்றோருடன் செல்லவில்லை.
யுவதியின் தாயாருடன் யாழ்ப்பாணம் திரும்புவதாக, இளைஞனின் பெறறோரிடம் குறிப்பிட்டனர்.
எனினும், அந்த ஜோடி யாழ்ப்பாணம் வரவில்லை.
அந்த ஜோடியை இளைஞனின் பெற்றோர் வலைவீசி தேடி வந்தனர்.
அந்த நிலையில் தாயாரும், 14 வயது மகனும் கடத்தப்பட்டனர். போதைப்பொருளுக்கு அடிமையான கூலிப்படை ஒன்றின் மூலம் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. சகோதரி எங்கே என கேட்டு, 14 வயது சிறுவனும் அந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளான்.
எனினும், அன்றைய தினமே சிறுவன் நெல்லியடி பொலிசாரால் மீட்கப்பட்டான். மறுநாள் அதிகாலை தாயார் விடுவிக்கப்பட்டார்.
இந்த கடத்தலின் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் இளைஞனின் தந்தை கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தாயார் அந்த கும்பலால் மிகக் கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் விரிவான பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தாயார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்த கொடூரத்தை புரிந்த கும்பலில் சுமார் 8 பேர் வரையானவர்கள் இருந்திருக்கலாமென பொலிசார் கருதுகின்றனர். அவர்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர்.
அந்த கொடூர கும்பல் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.