ஆலோசனை கூட்டத்தில் முககவசம் அணியாததால் தாய்லாந்து பிரதமருக்கு பாங்கொக் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நோய் கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்கொக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாங்கொக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முக கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்கொக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் அபராதம் விதித்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது பொலிசில் புகார் அளித்துள்ளதாக பாங்கொக் கவர்னர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.