மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் குடும்பத்தினரை திங்கட்கிழமை அன்று காலை சந்தித்த நடிகர் விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் மாரடைப்பின் காரணமாக கடந்த 17ஆம் திகதி காலை காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
விவேக்கின் மறைவைத் தொடர்ந்து அவரின் நினைவாக மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நலத் திட்டங்களை இன்று வரை பல ரசிகர்களும், சக திரையுலகினரும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் நடிகராக வளர ஆரம்பித்த காலத்திலிருந்து சமீப காலம் வரை அவரோடு எண்ணற்ற படங்களில் நடித்தவர் விவேக். .
’குஷி’, ’பிரியமானவளே’, ’பத்ரி’, ’ஷாஜகான்’, ’தமிழன்’, ’யூத்’ என அடுத்தடுத்து விஜய்யின் படங்களில் நடித்ததோடு அவற்றின் வெற்றியிலும் விவேக்கின் பங்குள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான ’பிகில்’ திரைப்படத்திலும் விவேக் விஜய்யோடு சேர்ந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் விவேக் மறைவின் போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்ஜியாவில் இருந்தார். கொரோனா விதிமுறைகளால் உடனடியாகக் கிளம்பி வரும் சூழல் இல்லாததால் விஜய்யால் விவேக்குக்கு நேரடியாக அஞ்சலி செலுத்த முடியவில்லை.
தற்போது ஜோர்ஜியாவிலிருந்து திரும்பியிருக்கும் விஜய், திங்கட்கிழமை காலை அன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து அவர்களுக்குத் தன் இரங்கல்களையும், ஆறுதல்களையும் கூறியிருக்கிறார்.