பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சினிமா துணை நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அவர் சிலரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக நாமக்கல் குழந்தை நல பாதுகாப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 4 பேரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து துரிதமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சத்திரம் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ராசிபுரம் தாலுகா பட்டணம் பரமேஸ்வர் நகரை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (20), கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து வெவ்வேறு நாட்களில் தண்ணீர்பந்தல்காட்டை சேர்ந்த சினிமா துணை நடிகரான மோகன்குமார் (27), காரைக்குறிச்சியை சேர்ந்த பெயிண்டர் கவின்ராஜ் (19) மற்றும் கண்ணையன் (45) ஆகியோர் மாணவியை பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்ச்செல்வன், மோகன்குமார், கவின்ராஜ் ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.