ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி கலீல் அகமது, அபிஷேக் வர்மா ஆகியோரது சிறப்பான பந்து வீச்சால் 19.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 22, ஷாருக்கான் 22 ரன்கள் சேர்த்தனர். கப்டன் கே.எல்.ராகுல் 4, கிறிஸ் கெயில் 15, நிக்கோலஸ் பூரன் 0, தீபக் ஹூடா 13, மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் 14, பேபியன் ஆலன் 6, முருகன் அஸ்வின் 9, மொகமது ஷமி 3 ரன்களில் நடையை கட்டினர்.
எளிதான இலக்குடன் பதிலளித்த ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணிக்கு இந்த சீசனில் இது முதல் வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இது 3வது தோல்வியாக அமைந்தது.
தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கப்டன் கே.எல்.ராகுல்கூறும்போது, “ஆடுகள சூழ்நிலையை தகவமைத்துக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இங்கு நடைபெற்ற ஆட்டங்களை பார்த்த பிறகு, இந்த ஆடுகளத்தில் இருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பதை அறிந்திருந்தோம். எங்களால் முடிந்தவரை விரைவாக சூழ்நிலைகளை பயன்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் நாங்கள் 10 முதல் 15 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். ஒரு சில ஆட்டக்காரர்கள் செட் ஆனார்கள். ஆனால் அவர்களால் 30 முதல் 40 ரன்களை எடுக்க முடியவில்லை.
இந்த தவறில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். அடுத்த சில நாட்களில் இங்கு மீண்டும் விளையாட உள்ளோம், அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது இருந்தே எங்களுக்கு ஓவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. நாங்கள் எப்போதும் இதுபோன்ற சூழ்நிலையிலேயே இருக்கிறோம்” என்றார்.