தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். இந்நிலை எதிர்காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமாயின் எமது இந்த ஜனநாயக ரீதியான அரசியலைப் பலப்படுத்த வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த நாட்டிலே தமிழர்கள் அடக்கப்பட்டதும், ஒடுக்கப்பட்டதும், பல இடம்பெயர்வுகள் இடம்பெற்றமையும் யாருமே மறுக்க முடியாதவை. இந்த நாட்டில் எமது இனமும் ஜனநாயக ரீதியாக வாழ வேண்டும். நீண்ட வரலாற்றினைக் கொண்ட எமது இனம் இந்த மண்ணிலே நிலையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எமது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு செயற்படுகின்றது.
இந்த நாட்டின் ஜனநாயகம் பொருந்திய ஒரு கட்சியாக எமது கட்சி இருக்கின்றது. நாங்கள் எந்த விடயத்திலும் சோரம் போய் எமது சமூகத்தைச் சிரழிக்கும் விடயத்திற்கு ஒருபோதும் முன்நிற்கவில்லை. தற்போது மிகவும் மோசமானதொரு அடக்கு முறையை எமது தமிழ் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இறைவழிபாட்டைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒருநிலைமை இன்று இந்த நாட்டிலே நிலவுகின்றது. இந்து ஆலயம் அமைப்பதென்றால் பல இழுத்தடிப்புகளும், பௌத்த ஆலயம் அமைப்பதென்றால் உடனடி நடைமுறைகளுமே இங்கு இடம்பெறுகின்றது.
நாங்கள் வடக்கு கிழக்கு என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்குமான ஒரு தீர்வை வேண்டி நிற்கின்ற போது எங்களோடு தமிழ் பேசும் உறவுகளாக இருக்கின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். கடந்த காலங்களிலும் எம்மோடு ஜனநாயக ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று எம்மிடம் தெரிவித்து விட்டு அதற்கு மாறாக அரசுடன் இணைந்த சம்பவங்களே பல இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தாலும் கிழக்கில் இருக்கின்ற ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலன்களுக்காக எமது சமூகத்தில் இருக்கின்ற சில அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக இப்போதும் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாகக் கல்முனைத தமிழ் பிரதேச செயலகம் என்ற அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் முன்னெடுப்பதென்பது மிகவும் ஒரு மன வேதனையான விடயம்.
முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் எமது கட்சி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களை எமது கட்சி முன்னெடுத்திருந்தது. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காககத் தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்கின்றோம். அவர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே இருக்கின்ற சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான விடயங்களைச் சாதிப்பதென்பது எதிர்காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும். அதனையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். நாங்கள் மனவேதனைப் படுகின்றோம்;.
இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. எனவே எதிர்காலத்தில் நாங்கள் எமது செயற்பாடுகளை தூரநோக்குக் கொண்டு அமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனறு தெரிவித்தார்.