பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கை படகொன்றை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அரபிக் கடலில் திங்களன்று கைப்பற்றியுள்ளது. படகிலிருந்த 5 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை படகில் இருந்து கிட்டத்தட்ட 340 கிலோகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில், சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து போதைப்பொருள்களை பெற்றதாக ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் மக்ரான் கடலோரப்பகுதியிலிருந்து இந்த படகு வந்து கொண்டிருந்தது. இந்திய கடற்படைக் கப்பலான சுவர்ணா, இந்த படகை வழிமறித்து சோதனையிட்டது.
முதற்கட்ட சோதனையில் எவையும் அகப்படவில்லை. படகில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 340 பக்கெட் ஹெரோயின் பின்னர் மீட்கப்பட்டது. ஒவ்வொரு பக்கெட்டிலும் கிரீடம் சின்னத்துடன் KING 2021 என முத்திரை குத்தப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இந்திய மதிப்பில் ரூ.340 கோடியும், சர்வதேச மதிப்பில் ரூ 1,750 கோடியும் பெறுமதியுடையவை.