கொரோனா பரவலால் மற்றவர்களும் தன் வழியை பின்பற்ற கோரிக்கை
நாடு முழுவதும் கொவிட்-19 பரவல் வேகமெடுத்து வருகிறது. இதன் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. நான்கு மாநிலங்களில் தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் இன்னும் மூன்று கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ளன. வரும் 22ஆம் தேதி ஆறாம் கட்டமும், 26ஆம் தேதி ஏழாம் கட்டமும், 29ஆம் தேதி எட்டாம் கட்டமும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளன.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த சூழலில் மேற்குவங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் கொரோனா பரவலால் பெரிய அளவில் அரசியல் கூட்டங்களை நடத்துவது பேராபத்தில் முடியும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஒரேநாளில் இவ்வளவு பெரிய உச்சம் தொடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து 4வது நாளாக புதிய பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளன. இதன்மூலம் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளலாம்.
எனவே தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும் தவிர்ப்பது நல்லது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் முக்கியப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மேற்குவங்க மாநிலத்தில் என்னுடைய அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துவிட்டேன்.
தற்போதைய சூழலில் பெரிய அளவிலான அரசியல் கூட்டங்கள் நடத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சிந்தித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நலன் கருதி ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள விஷயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ராகுலை பின் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.