சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி எந்நேரமும் உயிரிழக்ககூடும் என்று அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்சி நவால்னி(44). ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதியினால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வேதிப்பொருள் தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற நவால்னி ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த நவால்னி கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மீண்டும் ரஷ்யா வந்தார்.
மொஸ்கோ விமானநிலையம் வந்து இறங்கிய நவால்னியை ரஷ்ய பொலிசார் கைது செய்தனர். 2014ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் நவால்னி கைது செய்யப்பட்டதாக ரஷ்ய பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவால்னிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மொஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் என்று அவரது மருத்துவர் யர்சொல்ஸ்வா அஷீக்மின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியின் உடல்நிலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த தரவுகளை பரிசோதனை செய்ததில் அவரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு தீவிரமாக உயர்த்தப்பட்டது. இது மாரடைப்பு மற்றும் சிறுநீரகத்தை பலவீனமடைய செய்யும். எங்கள் நோயாளி (அலெக்சி நாவல்னி) எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்’ என தெரிவித்துள்ளார்.