வடக்கில் தலைவரையும் கிழக்கில் செயலாளரையும் தேர்தலில் தோற்கடித்து வடகிழக்கில் இருந்து மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தூக்கி எறிந்துள்ளனர்.கூட்டமைப்பின் அநியாயத்தினால் வடகிழக்கில் இளம் சமூதாயம் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர்.எனவே இளம் சமுதாயத்தை பாழாக்காது மக்கள் இனியாவது சிந்தியுங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
மாகாண சபை முதலமைச்சர் தொடர்பில் கூட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் நேற்று(16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினை வடகிழக்கில் தொழிலாளர் வர்க்கமாகிய நாங்கள் தூக்கி எறிந்து விட்டோம். கடந்த 20 வருடங்களாக அண்ணன் பிரபாகரனும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சொன்ன ஒரே காரணத்திற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கைகோர்த்திருந்தோம். அவர்கள் உழைக்கும் தொழிலாளர்களான எமக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் ஒன்றினை வழங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இதனால் நாங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தினை கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புறக்கணித்ததன் காரணமாக கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்ப்பலை ஏற்பட்டதுடன் தமிழரசுக்கட்சி கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோற்கடிக்கப்பட்டார்.
அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டாரெனின் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு செய்த துரோகமாகும். அதனை அவர் உணர வேண்டும். எமது தொழிற்சங்கமானது வடகிழக்கில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்கள் சேவை மகேசன் சேவை என்ற ரீதியில் சேவை செய்து வருகின்றோம். இவ்வாறான தொழிற்சங்கத்தை புறந்தள்ளி அவர்களின் சுகபோகத்தை அனுபவித்ததன் விளைவே தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மக்களினால் தூக்கி எறியப்பட்டார்.
நாங்கள் அவருக்கு எதிராக வடகிழக்கு மாகாணத்தில் செயற்பட்டோம். அவரை தோற்கடிக்க வேண்டும் என செயற்பட்டோம். இச்செயற்பாட்டிற்கு எமது மனவேதனை தான் காரணமாகும். அத்துடன் மாவையின் மீது தனிப்பட்ட எவ்வித கோபதாபமும் இல்லை. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தறி;கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே அவரை தோற்கடிக்க இரவு பகலாக நாம் பாடுபட்டோம்.
அதில் வெற்றியும் கண்டுள்ளோம். எம்முடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோபித்து கொண்டாலும் பரவாயில்லை. இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியது விடுதலைப்புலிகள் தான்.இன்று விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருப்பார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த காலங்களில் 22 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்களின் ஆதரவுடன் பெற்றுக்கொடுத்திருந்தார். இதனை தற்போது உள்ள கூட்டமைப்பினரால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப்புலிகள் தியாகிகள்.இதனால் தான் 22 ஆசனங்கள் மக்கள் ஆதரவுடன் கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது இதனை தக்க வைக்க முடியாமல் சுயநலத்துடன் செயற்படுகின்றனர். பொதுநலன் என்பதே கிடையாது. இதனால் தான் மக்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பினை புறக்கணித்து வருகின்றனர். தற்போது 22 இல் இறங்கி 10 ஆசனங்களாக குறைந்துள்ளது.வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அருகதையற்றவர்கள் என்றே கூற வேண்டும். எனவே வடகிழக்கு மாகாண மக்கள் சிந்திக்க வேண்டும்.
வடக்கு மாகாண முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விக்னேஸ்வரன் என்பவரை கொண்டு வந்தனர்.என்ன நடந்தது?நாங்களும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் விக்னேஸ்வரனின் வெற்றிக்காக செயற்பட்டோம். நடந்தது என்ன?மாகாண சபைக்கு வந்த நிதியை கூட மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது தான் மிச்சம். இப்படியான அரசியலை செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டினை நினைத்து வெட்கமடைகின்றோம். வேதனையடைகின்றோம். இந்த மாகாணத்தை கைப்பற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அருகதையற்றவர்கள். வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் என்பவர்களை வித்தியாசமாக நோக்க வேண்டும்.ஏனெனில் எமது மாகாணம் கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதாகும்.இங்கு தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை முன்னேற்றுவதற்கு சிறந்த அர்ப்பணிப்புள்ள தலைமைத்துவம் உள்ளவர்களையே முதலமைச்சராக கொண்டுவர வேண்டும்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை முதலமைச்சர்களாக கொண்டு வர கூடாது என்பது தான் எமது கருத்து. வடகிழக்கு மாகாண மக்களே நீங்கள் சிந்தியுங்கள். மாகாண சபை சிறப்பாக இயங்க வேண்டும் என்பது தான் எமது அவா.அமைச்சுக்களின் ஆலோசனை சபை ஒன்றினை அமைப்பதற்கு வடகிழக்கில் மாகாண சபையை ஆட்சி செய்த கூட்டமைப்பினை நாம் கோரியிருந்தோம். ஆனால் எம்மை அவர்கள் தூக்கி எறிந்திருந்தார்கள். இதில் தற்போது யார் பாதிக்கப்பட்டார்கள் உழைக்கும் தொழிலாளர் வர்க்கமும் மக்களும் தான்.நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்க காரணம் ஆலோசனை சபை விடயத்தை நிராகரித்து மக்களுக்கு எதிராக செயற்பட்டதனால் ஆகும்.இதனால் தான் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமும் தேர்தலில் கூட தோற்கடிக்கப்பட்டார். மக்களுக்காக செயற்படாததால் வடக்கில் தலைவரையும் கிழக்கில் செயலாளரையும் தேர்தலில் தோற்கடித்து மக்கள் தூக்கி எறிந்தனர். இதனால் தான் வடகிழக்கில் இருந்து மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தூக்கி எறிந்துள்ளனர்.
எனவே இளம் சமுதாயத்தை பாழாக்காது மக்கள் இனியாவது சிந்தியுங்கள். கூட்டமைப்பின் அநியாயத்தினால் வடகிழக்கில் இளம் சமூதாயம் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். இதற்கு காரணம் எதிர்கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்து கொண்டு இளம் சமூதாயத்தின் வேலைவாய்ப்பினை நிராகரித்தது.இந்த சாபம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சும்மா விடாது.நீங்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம். நானும் மக்களும் கூட்டமைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது குடும்பம் கூட பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் குடிசை வாழ்க்கையை உருவாக்கியவர் யார்? நீங்கள் தான்(கூட்டமைப்பு) உருவாக்கியவர்கள்.
உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் எதுவும் செய்யவில்லை. நீங்கள் தொடர்ந்தும் பதவிக்காக ஓடித்திரிகின்றீர்கள். தகுதி இல்லாதவர்கள் அநேகர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பாராளுமன்றம் மாகாண சபை பிரதேச சபைகளுக்கு சென்றுள்ளனர். எனவே மக்கள் சிந்தித்து இனியாவது செயற்பட வேண்டும். இந்த அவல நிலையை மக்கள் உணர்ந்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். குறிப்பாக மாவை சேனாதிராசாவிற்கோ கலையரசனுக்கோ முதலமைச்சர் வேட்பாளராக தகுதி இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இவ்விடயமானது பாதிக்கப்ட்ட ஒட்டுமொத்த மக்களின் கருத்து என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
-பா.டிலான்-