முன்னாள் எம்.பி சரவணபவன்- இன்னாள் எம்.பி சுமந்திரன் மோதல் இன்னும் தீர்ந்தபாடில்லை. எம்.பி பதவியில்லாமல் இருக்கும் சரவணபவனை வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம் என கருதியோ என்னவோ, சரவணபவனின் “ஏரியா“விற்குள் புகுந்து விளையாட தொடங்கி விட்டார் சுமந்திரன்.
நேற்று வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலை சுமந்திரன் நடத்தினார்.
என்ன அடிப்படையில் அந்த சந்திப்பு நடத்தப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. கட்சி தலைமைக்கும் அப்படியொரு சம்பவம் நடப்பது தெரியாது. வழக்கமான ஆள்ப்பிடிக்கும் நகர்வாக இருக்கலாம்.
வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் பலர் சரவணபவனினால் நியமிக்கப்பட்டவர்கள். அவர் எம்.பியாக இருந்த போது, “சேர்… சேர்“ என பின்னால் திரிந்தார்கள். தேர்தலில் தோற்றதுதான் தாமதம், இப்பொழுது அவர்களின் சேர், சுமந்திரன்!
தவிசாளர் உள்ளிட்ட பாதி உறுப்பினர்கள் இருந்த நிலையில் இருந்தே, மற்ற பக்கம் பல்டியடித்து விட்டனர்.
ஆனால், நேற்று பாதி உறுப்பினர்கள் கூட்டத்திற்கு போகவில்லை.
வலி மேற்கிற்கு சுமந்திரன் போனமைக்கு ஒரு காரணமுள்ளது.
சில நாட்களின் முன்னர் அங்கு ஒரு சர்ச்சை நடந்தது. நியமன பட்டியல் உறுப்பினரான பேக்கரி உரிமையாளர் ஒருவரை பதவியை விட்டு விலகி, இன்னொருவருக்கு சந்தர்ப்பம் அளிக்கும்படி சரவணபவன் தரப்பு கேட்டதாகவும், அந்த பேக்கரி உரிமையாளர் கடிதத்தை வழங்கியதாகவும் பேச்சு வந்தது.
கூட்டமைப்பின் நியமன பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது, இரண்டரை வருடம் வழங்கப்படுவதாக கூறி, அடுத்த இரண்டரை வருடம் அடுத்தவருக்கு வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. பருத்தித்துறையில் சுமந்திரனின் வலது கை ஒருவரால் இதில் ஏமாற்றப்பட்ட முல்லைத்திவ்யன் என்பவர் இது பற்றி தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதி வருகிறார்.
தன்னிடம் பலவந்தமாக விலகல் கடிதம் கோரப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் கூறி, அதை கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் முறையிட்டார்.
மாவை தலையிட்டு, அந்த பிரச்சனையை முடித்து வைத்தார். அதாவது பேக்கரி உரிமையாளரே தொடர்ந்து உறுப்பினராக இருக்கட்டும் என பஞ்சாயத்தை முடித்து வைத்தார். சரவணபவனும் அந்த விவகாரத்தை விட்டுவிட்டார்.
பேக்கரி உரிமையாளரினால், பலவந்தமாக கடிதம் பெறப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டதையடுத்து, கடந்த வாரம் அவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது. தன்னிடம் யாரும் பலவந்தமாக கடிதம் பெறவில்லையென்றும், சுயவிருப்பின் அடிப்படையில் கடிதம் வழங்கியதாகவும், சுயவிருப்பின் அடிப்படையில் தான் கடிதம் வழங்கிய விவகாரத்தையெல்லாம் செய்தியாக்கி, பிரச்சனையாக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.
நேற்று திடீரென இந்த கூட்டம் கூட்டப்பட்டு, பேக்கரி உரிமையாளரின் பிரச்சனை பேசப்பட்டது.
தன்னிடம் பலவந்தமாக கடிதம் வாங்கப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் மூக்கை சிந்தியிருக்கிறார்.
அப்படி பலவந்தமாக கடிதம் பெற முடியாது, ஏற்கனவே வழங்கப்பட்ட கடிதத்திற்கு மறுப்பு கடிதமொன்றை அனுப்புங்கள் என சுமந்திரன் ஆலோசனை கூறியுள்ளார். அத்துடன், எற்கனவே முடிந்த அந்த பிரச்சனையை பற்றியே நீண்டநேரம் விவாதித்துள்ளனர்.
என்ன பேக்கரி டீலிங்கோ தெரியவில்லை!