‘அடையாளம் தெரியாதவர்’ என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மகேஷ் பத்மநாபன் (67) என்ற பெயரிலான நபர் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர் இலங்கையில் இருந்து வந்தவர்.
குடிநுழைவு குற்றத்தை எதிர்நோக்கும் அந்த நபர் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாகத் தங்கி வருகிறார் என கூறப்பட்டது.
ஆனால் மகேஷ் பத்மநாபன் என்ற பெயரில் அவர் வைத்திருக்கும் கடப்பிதழ் செல்லுபடியாகாதது என்று குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரி கூறினார்.
அவர் வெவ்வேறு பெயர்களில் பல பத்திரங்களை வைத்திருப்பதால் அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது சிரமமாக உள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.
எனவே, ‘அடையாளம் தெரியாதவர்’ (Unknown) என்ற பெயரில் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்து வழக்கை நடத்த அரசு தரப்பு கோரியது.
ஆனால் இது குறித்து நீதிபதி ஆடம் நக்கோடா கவலை தெரிவித்தார்.
‘அடையாளம் தெரியாதவர்’ என்று குறிப்பிடப்பட்ட ஒருவர் மீது எவ்வாறு குற்றம் சாட்டுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
“எனக்கு இது புரியவில்லை. அடையாளம் தெரியாதவர் என்று குறிப்பிடப்பட்ட ஒருவர் மீது குற்றம் சுமத்த நான் எப்படி அனுமதிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
மீண்டும் மகேஷ் பத்மநாபன் என்ற பெயரிலேயே குற்றம் சுமத்தி வழக்கைப் பதியுமாறும் இந்த விவகாரம் குறித்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் விளக்கம் பெறுமாறும் அரசுத் தரப்பிடம் கூறப்பட்டது.
மொழி பெயர்ப்பாளர் குற்றச்சாட்டை சந்தேநபரிடம் தமிழில் வாசித்துக் காட்டினார். அவரது அடையாளம் உறுதியாகவில்லை என்று மொழிபெயர்ப்பாளர் நீதிமன்றத்திடம் கூறினார்.
பெப்ரவரி 6ஆம் திகதி முதல் விசாரணைக் காவலில் உள்ள அந்த நபர், காணொளி மூலம் நடந்த விசாரணையில் நீண்ட நரைத்த தலை முடியுடன் காணப்பட்டார். அவருக்கு 20,000 சிங்கப்பூர் டொலர் பிணை வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது அவர்
பேசவில்லை. அவ்வப்போது தலையை மட்டும் ஆட்டினார்.
அவர் மீது மேலும் அதிக குற்றங்களைச் சுமத்தவுள்ளதாகவும், ஆனால் முதலில் அவர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் அதிகாரி கூறினார்.
வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பது நிரூபணமானால் அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 6,000 சிங்கப்பூர் டொலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம். அவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் பிரம்படி கொடுக்கப்படாது.