எறும்பைப் போல் சுறுசுறுப்பும், எதுகை, மோனையான பேச்சும், சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத்திறனும் கொண்ட நீங்கள், நிர்வாகத் திறமையும், செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலும் கொண்டவர்கள். எதிர்மறையாக யோசித்து நேர்மறையாகச் செயல்படுவதில் வல்லவர்கள். செவ்வாய் 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த பிலவ வருடம் பிறப்பதால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள்.
குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவும் கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். எதிலும் மகிழ்ச்சி உண்டு.
இந்தப் புதிய வருடம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்துக்குப் பின்பு முடியும். ஒருபக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து கொண்டேயிருக்கும். இரண்டாம் முயற்சியில் சில வேலைகள் முடியும். வீட்டில் குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து செல்லும்.
இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் ஆறாம் வீட்டில் நுழைவதால் செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். பணக் கையிருப்புகள் கரையும். 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு ஐந்தாம் வீட்டில் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவி வழியில் உதவி உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.
20.3.2022 வரை ராகு ஒன்பதாம் இடத்தில் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். வருடம் பிறக்கும்போது கேது மூன்றாமிடத்தில் நிற்பதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு எட்டில் இருப்பதால் பயணங்களில் கவனம் தேவை. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். கேது இரண்டில் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப் போய் சிலசமயம் மனக்கசப்பில் போய் முடியும்.
சனி ஐந்தில் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். ஆனி மாதம் திடீர் பணவரவு, வாகன வசதியும் சொத்துச் சேர்க்கையும், சுபகாரியங் களும் நிகழும். புரட்டாசி மாதத்தில் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும. பூர்விகச் சொத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.
சித்திரை, ஆனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது ஊழியர்களையும் பணியில் அமர்த்துவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர் களுடன் பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் சித்திரை, ஆனி மாதங்களில் உண்டு. அவ்வப்போது வேலைச்சுமை, படபடப்பு ஆகியவற்றுடன் கலகலப்பான அனுபவங்களும் உண்டு. இந்த பிலவ ஆண்டு அடுத்தடுத்து வேலைச் சுமையால் ஆரோக்கியத்தைக் குறைத்தாலும், அவ்வப்போது வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.
பரிகாரம்
அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் பைரவரை அஷ்டமி திதி நாளில் சென்று பன்னீர் அபிஷேகம் செய்து வணங்குங்கள். பானகம் (சுக்கு+வெல்லம்) தானமாகக் கொடுங்கள்.