சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து ருசிப்பவர்களே!
பாலைவனத்திலும் பதியம் போட்டு பசுமையைப் பார்க்கும் கற்பனைவாதிகளே! ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கும் நீங்கள், களங்கமற்ற பேச்சால் சுற்றியிருப்பவர்களைக் கலகலப்பாக்குவீர்கள்.
இந்த பிலவ ஆண்டு உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறப்பதால் தொட்டது துலங்கும். ஆரோக்கியம், அழகு கூடும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள். கடன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். நாடாள்பவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். ஆனால் இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வீணான வறட்டுக் கௌரவத்துக்காகச் சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள்.
இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 10-ல் நுழைவதால் எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பின்னரே முடிக்க வேண்டியது வரும். வீண்பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். யாரையும் நம்பி எந்தப் பணியையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு. பழைய கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும்.
20.3.2022 வரை ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, நெஞ்சுவலி, முன்கோபம் அதிகரிக்கும். கேது ஏழில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்துநீங்கும். படபடப்பு, கெட்ட கனவுத்தொல்லை வரக்கூடும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை 12-ல் ராகு நுழைவதால் உடல்நலம் சீராகும். ஆனால் தூக்கம் கெடும். கேது ஆறாம் இடத்தில் நுழைவதால் திடீர் பணவரவு, யோகம் உண்டு. கடன்பிரச்சினை தீரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். அவ்வப்போது வரும் முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். எதிர்காலத்தை நினைத்துச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ஒன்பதாம் வீட்டுக்குச் சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீண் அலைச்சல், சிறுசிறு விபத்து கள் நிகழக்கூடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். லேசாக தலைவலி, உடல் சோர்வு வந்து நீங்கும்.
மார்கழி, தை மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். மனப் போராட்டம் ஓயும். அரசு காரியங்களில் இருந்த தேக்க நிலை மாறும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் மன நிறைவு தரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்கால ஆசைகளில் ஒன்று நிறைவேறும். தாழ்வு மனப்பான்மை விலகும்.
வி.ஐ.பி.க்களது நட்பு கிடைக்கும். உங்கள் மனத்தை வாட்டிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் நிகழும். அக்கம் பக்கத்தாருடன் இருந்த மோதல்கள் மாறும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாள்வீர்கள்.
தொழில் சம்பந்தமாக அயல்நாடுகள் சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். கணினி துறையினர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். இந்தப்புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைக் கழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக் கொடுக்கும்.
பரிகாரம்
அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வாரை ஏகாதசி திதி நாளில் சென்று தேன் அபிஷேகம் செய்து வணங்குங்கள். இளநீரை தானமாகக் கொடுங்கள்.