எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்லும் அளவுக்கு மதியூகம் கொண்டவர்கள். கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் செயலாற்றுபவர் நீங்கள், ஒட்டுமொத்தக் குடும்ப பாரத்தையும் சுமக்கும் சுமைதாங்கிகள். சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த பிலவ வருடம் தொடங்குவதால் பெரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களுக்கு நெருக்கமாவீர்கள். புதிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.
இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு ஒன்பதாம் இடத்தில் அமர்வதால் எதிர்பாராத பணவரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. வெளிவட்டாரத்தில் உங்களை உதாசினப்படுத்தியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தின் வருமானமும் உயரும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு எட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் யாருக்கும் சாட்சிக் கையெழுத்திடவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
20.3.2022 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால் பயம், கோபம், தூக்கமின்மை, வீண் செலவு, திடீர் பயணம் என வரக்கூடும். கேது ஆறாம் இடத்தில் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் தகுதி உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும்.
இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச்சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்விமனப்பான்மை, வீண்பழி வந்து போகும். பணப்பற்றாக்குறை, கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கை தேவை. ஆனி மாதத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் தொடங்கலாம் என முயன்றபோது வந்த தடைகளும், தாழ்வு மனப்பான்மையும் நீங்கும். இனி நீங்கள் எதையும் தகுந்த முன்யோசனையுடன் செய்வீர்கள். கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும். அழகு கூடும். முகம் மலர்ச்சி அடையும். அண்டை வீட்டாருடன் அனுசரணையான உறவு இருக்கும்.
வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஊழியர்களிடம் நிதானமாக இருங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
அலுவலகத்தில் வேலைகளை உற்சாகமாகச் செய்வதற்கான ஊக்கமும் பாராட்டும் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும், மன அமைதியையும் அள்ளித்தரும்.
பரிகாரம்
அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனை பாலபிஷேகம் செய்து வணங்குங்கள். கரும்புச் சாறு தானமாகக் கொடுங்கள்.