புற்றுநோய் சிறப்பு மருத்துவ அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.அழகு கணேஷ்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… ஏன்?
ஹெச்.பி.வி (HPV Human papillomavirus) எனப்படும் வைரஸ் கிருமியால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) ஏற்படுகிறது. விழிப்புணர்வின் காரணமாக வளர்ந்த நாடுகளில் இந்நோயின் தாக்கமும் உயிரிழப்பும் குறைவாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் இந்நோய் பற்றிய அறியாமை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு 1.04 லட்சம் பெண்கள் இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக, கிராமப்புறப் பெண்கள் பலர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ‘ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 200 பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
எப்படிக் கண்டறிவது..?
நோய் பாதிப்பு ஆய்வு (Screening Test) செய்து, இந்நோயின் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியலாம். உதாரணமாக, கர்ப்பப்பை வாய் திசுக்களை எடுத்து செய்யப்படும் பேப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை செய்யலாம். அல்லது திரவ அடிப்படையிலான சைட்டாலஜி (Cytology) பரிசோதனை செய்யலாம். பாதிப்பு கண்டறியப்பட்டால் தொடர்ந்து நோயறிதல் (Diagnosis) பரிசோதனை, சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்படும்.
எந்த வயதில் பரிசோதனைகள்..?
- 21 வயதுக்கு மேல் பேப் ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
- 21 – 29 வயதுவரை உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- 30 – 65 வயதுவரை உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் டெஸ்ட், அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை திரவ ஆய்வு (LBC+HPV DNA) செய்துகொள்ளலாம்.
அறிகுறிகள்..!
ஆரம்பநிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள் எதுவும் வெளியே தெரிவதில்லை. முற்றிய நிலையிலேயே தெரிய வரும்.
- மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்களில் ரத்தப்போக்கு.
- உறவின்போது வலி.
- உறவுக்குப் பின் உதிரப்போக்கு.
- துர்நாற்றம்.
- கடுமையான முதுகுவலி, இடுப்புவலி.
தடுப்பூசிகள் இருக்கிறதா..?
கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க செர்வரிக்ஸ் (Cervarix), கார்டசில் (Gardasil) என்ற இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் செர்வரிக்ஸ் இந்தியாவில் கிடைக்கிறது. தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் கார்டசில், விரைவில் இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை மட்டுமல்ல, ஹெச்.பி.வி வைரஸால் ஏற்படும் தொண்டை, ஆசனவாய்ப் புற்று, பிறப்புறுப்பில் ஏற்படும் மரு போன்றவற்றையும் இந்தத் தடுப்பூசிகள் தடுக்கும் என்பதால், இதை ஆண்குழந்தைகள் மற்றும் ஆண்களும் போட்டுக்கொள்வது நல்லது.
தடுப்பூசி வயது அட்டவணை
- ஹெச்.பி.வி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 9 – 26 வயது வரை சிறப்பான காலமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- 45 வயதுவரைக்கும் கூட போட்டுக்கொள்ளலாம்.
- 9 – 26 வயதுக்குட்பட்ட இரு பாலரும் மூன்று இடைவெளிகளில் கார்டசில் போட்டுக்கொள்ளலாம்.
- 9 – 26 வயதுக்குட்பட்ட பெண்கள் 3 இடைவெளிகளில் செர்வரிக்ஸ் போட்டுக்கொள்ளலாம்.
ஹெச்.பி.வி தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மேலே குறிப்பிட்ட வயதுகள் மற்றும் இடைவெளிகளில் ஸ்கிரீனிங் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை
நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி என சிகிச்சைகள் உள்ளன.