நடிகை ஆத்மிகாவுக்குக் கைவசம் இருந்தது விஜய் ஆண்டனியுடன் ‘கோடியில் ஒருவன்’ மட்டுமே. அதன் பிறகு, பட வாய்ப்புகள் எதுவுமில்லாததால், கிளாமர் ஸோனுக்குள் செல்லவும் தயாராகிவிட்டார். அதனாலேயே, அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி, இன்ஸ்டாவில் கவர்ச்சி மழை பொழிகிறார். ‘காட்டேரி’, ‘நரகாசூரன்’ படங்கள் வெளியானால் வாய்ப்புகள் வரும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால், அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் எனப் படக்குழுவுக்கே தெரியாது என்பதுதான் வருத்தமான தகவல்.
ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கரும் அந்த ஜானரில் குதித்துவிட்டார். ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ஐரா’ ஆகிய படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் பிரியா. தொடர் கொலைகளை மையமாகவைத்து நகரும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கருக்கு டி.வி ரிப்போர்ட்டர் கேரக்டராம்.
டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகா, தனது எல்லையை விரிவாக்கத் திட்டமிட்டுச் சுழன்றுவருகிறார். சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ பரவலான பாராட்டுப் பெறுவதில் அவருக்கு ஹேப்பி. அடுத்து, ‘மிஷன் மஜ்னு’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராஷ்மிகா, அமிதாப் பச்சனுடன் ‘குட்பை’ என்ற இந்திப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
ஓட்டுப் போட சைக்கிள் ஓட்டிய காலோடு, அன்றிரவே ஜார்ஜியா பறந்துவிட்டார் விஜய். நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்துக்காக 23 நாள்கள் ஷூட்டிங்குக்குத்தான் இந்த அவசரப் பயணம். காஷ்மீரில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங், காஷ்மீரின் தற்போதைய அரசியல் சூழல்கள் காரணமாக ஜார்ஜியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே ஜார்ஜியாவில்தான் ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றது என்பது உபரித் தகவல்!
உஷ்…
விமர்சன சட்டைக்காரரின் படம் சென்சாரால் தடைவிதிக்கப்பட்டது என்ற தகவலை அந்தப் படக்குழுவினரே திட்டமிட்டுப் பரப்புகிறார்களாம். படத்தின் பெயருக்கு சென்சார் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அவர்கள் சொல்லும் திருத்தங்களோடு மறு சீராய்வுக்கு அனுப்பி ஓகே வாங்கிவிடும் முடிவில்தான் இருக்கிறார்களாம். படத்தின் டைட்டில்கூட இந்தப் பரபரப்புக்கெல்லாம் துணை நிற்கும் என்று திட்டமிட்டுத்தான் வைக்கப்பட்டதாம்!