♦ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக்காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபடமாட்டீர்கள். நீதி, நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பவர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே! உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் இந்த பிலவ ஆண்டு பிறப்பதால் இனந்தெரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனத்தில் தன்னம்பிக்கை தந்து தலைநிமிர வைக்கும்.
தொடர் போராட்டமாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி தங்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலை நோக்கு சிந்தனை அதிகரிக்கும். வழக்குகளிலிருந்த தேக்கநிலை மாறும். வருடமுற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனம் தேவைப்படுவதாகவும் அமையும்.
இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்துபோகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் நீதிமன்றம், வழக்கு என்று போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பாருங்கள்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு மூன்றாம் வீட்டுக்குச் செல்வதால் அது முதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டிவரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து்போகும்.
ஆண்டு தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராசிக்குள் கேது நிற்பதால் படபடப்பு், ரத்த அழுத்ததால் மயக்கம், பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு ஏழாமிடத்தில் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது ராசியை விட்டு விலகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். ஆறாமிடத்தில் ராகு அமர்வதால் பிள்ளைகளின் அடிமனத்தில் இருக்கும் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்குபடி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனிபகவான் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும்.
கார்த்திகை, மாசி மாதங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வீடு, வாகன வசதி உண்டாகும். மனக்குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கோயில்களைப் புதுப்பிக்க முற்படுவீர்கள். பிரபலங்களது நட்பு கிட்டும். தக்க நேரத்தில் உதவுவார்கள். பழைய வீட்டை விற்று, புதிய வீடு வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். புதிய ஆடை,ஆபரணங்கள் சேரும். உங்களால் வளர்ந்த சிலர் உங்களை வந்து சந்திப்பதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் கோபப்பட்டு பேச வைத்தாலும், மறுபக்கம் பணவரவையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
சிவாலயத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை வணங்குங்கள். பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வணங்குங்கள். தர்ப்பூசணி பழத்தைத் தானமாகக் கொடுங்கள்.