இந்திய அரசின் நிதி உதவியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் எனும் வீட்டுத்
திட்டத்தில் கிளிநொச்சியில் மலையாளபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 24
வீடுகள் வழங்கப்பட்ட போதும் அவ் வீடுகளை முழுமையாக அமைத்து முடிப்பதற்கான
நிதி பயனாளிகளுக்கு வழங்காமையால் அவர்கள் நிர்க்கதிக்குள்
உள்ளாகியுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளபுரம் கிராமத்தில் காணிகளுடன் 24 வீடுகளும்
வழங்கப்பட்டன. இதில் வீட்டுத்திட்டத்திற்கான பணம் முதல் கட்டம் இரண்டாம்
கட்டம் என வழங்கப்பட்ட நிலையில் மிகுதி பணம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் வீடுகளை பூரணப்படுத்த முடியாத நிலையில் பயனாளிகள்
காணப்படுகின்றனர். தாங்கள் வாழ்கின்ற தற்காலிக வீடுகளும் காலாவதியான
நிலையில் நிரந்தர வீட்டையும் பூரணப்படுத்தி அங்கும் செல்ல முடியாத
நிலையில் இருப்பதாக வீட்டுத்திட்டப் பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதில் சில பயனாளிகள் தாங்கள் வீட்டுத்திட்டப் பணம் கிடைக்கும் என நம்பி
10 வீத வட்டிக்கு பணத்தை பெற்று வீட்டு வேலைகளை நிறைவு செய்து
குடியேறிவிட்டதாகவும் ஆனால் வீட்டுத்திட்டப் பணம் கிடைக்காமையால் பெரும்
நெருக்கடியை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் வட்டியை தொடர்ந்து
செலுத்த முடியாத நிலையில் அவர்களின் கடும் சொற்களுக்கு உள்ளாகுவதாகவும்
தெரிவித்தனர்.
இது தொடர்பில் தாம் அதிகாரிகளிடம் சென்று வினவிய போது
வீட்டுத்திட்டத்திற்கான பணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்து
வருகின்றனர் எனப் பொது பொது மக்கள் குறிப்பிடுகின்றனர். எனவே தங்களின்
இந் நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு மிகுதி பணத்தை விரைவாக கிடைக்க
உதவி செய்யுமமாறு கோரியுள்ளனர்.