25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
சினிமா விமர்சனம்

`கர்ணன்’ பேசும் அரசியல் சம்பவம்… ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?!

ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின் நோக்கமாக இருக்கிறதே தவிர, குறிப்பிட்டு ‘இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது’ என்று சித்திரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

‘கர்ணன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்ற பேச்சுகள் இருந்தன. திரைப்படம் வெளியாகிவிட்டது. ‘பொடியன்குளம்’ என்று காட்டப்படும் கிராமம் கொடியன்குளம் சம்பவத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது பார்வையாளர்கள் எல்லோருக்கும் புரியும். இந்நிலையில், “1995-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த கொடியன்குளம் சம்பவத்தை 1998-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா, மாரி செல்வராஜ் ஏன் வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்” என ‘கர்ணன்’ படத்தின் மீது விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

கொடியன்குளம் சம்பவம் எந்த ஆண்டு நடந்தது?
1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் சரி, 1996-2001 கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் சரி தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் நடைபெற்றன. இவற்றை வழக்கமான சாதிய வன்முறையாக மட்டும் பார்த்துவிட முடியாது. 1990-91 அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவையொட்டி தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் பண்பாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இன்னொருபுறம் ஆதிக்கச்சாதியினரின் வன்முறைகளை எதிர்க்க ஒடுக்கப்பட்டவர்களும் அவர்களைப்போலவே வன்முறை போராட்டங்களில் இறங்கினர். குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் தந்தையையும் குடும்பப் பெரியவர்களையும் சாதித்தொழிலில் ஈடுபடவிடாமல் தடுத்தனர்.

பொருளாதாரத்திலும் ஓரளவு அவர்கள் வாழ்க்கை மேம்பட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆதிக்கச்சாதியினர் வன்முறையை ஏவியபோது காலங்காலமாகப் பொறுத்துக்கொண்டதைப் போல் அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் திருப்பித் தாக்கினர். எனவே ”இதை வெறுமனே சாதிக்கலவரமாகப் பார்க்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான போராட்டமாகப் பார்க்கவேண்டும்” என்று பல்வேறு அமைப்புகள் அப்போது வலியுறுத்தின.

வரலாற்று நாயகர்களின் பெயர்கள்
1997-ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி போக்குவரத்துக்கழகங்களுக்குத் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பெயர்களைச் சூட்டினார். அப்படித்தான் கட்டபொம்மனின் படைத்தளபதியான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கனார் பெயரையும் சூட்டினார். ”சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்பட்ட பேருந்தில் ஏற மாட்டோம்” என்று ஆதிக்கச்சாதியினர் போராட்டம் நடத்தினர். இருதரப்பிலும் கலவரம் மூண்டது. வன்முறைகளைத் தொடர்ந்து கருணாநிதி எல்லாப் போக்குவரத்துக்கழகத்தில் இருந்த பெயர்களையும் நீக்க வேண்டியதானது.

அதே 1997-ல்தான் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவரான முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 6 பேர் ஆதிக்கச்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் ஊராட்சித் தலைவராக ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இருந்ததை ஆதிக்கச்சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ”சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்பட்ட பேருந்தில் ஏற மாட்டோம்” என்பதும் ”ஒரு தலித்தை ஊராட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்பதும் அப்பட்டமான சாதிய மனநிலை. தீண்டாமை சட்டப்படி குற்றம் என்றாலும் அதை வெளிப்படையாக ஆதிக்கச்சாதிகள் கடைப்பிடிக்கும் சூழல் நிலவியது. சாதியும் தீண்டாமையும் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து அம்பலமாக்கியதும் அதற்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் இறங்கியதும் 90-களில் நிகழ்ந்தன.

இந்த வரலாற்றைத்தான் ‘கர்ணன்’ படத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருக்கிறார். பேருந்து என்பது நவீனத்துக்கான குறியீடு. ”ரயிலும் தொழிற்சாலைகளும் இந்தியாவில் சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்கும்” என்றார் கார்ல் மார்க்ஸ். ரயிலும் தொழிற்சாலைகளும் வந்தபிறகும் இந்தியாவில் சாதி ஒழிந்துவிடவில்லை. தொழிலாளர்களே சாதிரீதியாகத் திரண்டு சங்கங்களை நிறுவும் அவலம் நடக்கிறது. பேருந்து என்னும் நவீன வாகனமும் சாதியத்தின் கறைபடிந்துதான் இருக்கிறது. யார் பேருந்தில் அமர வேண்டும், யாருடைய பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது தொடங்கி சாதியத்தின் விதிகள் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு எதிரான போராட்டங்களும் பேருந்துகளில் இருந்து தொடங்கின.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம்
ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதும்தான் மாரி செல்வராஜின் நோக்கமாக இருக்கிறதே தவிர, குறிப்பிட்டு ‘இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது’ என்று சித்திரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் சாதி என்பது அரசையும் மீறியது, ஆட்சியாளர்களையும் பணியவைப்பது.

1989-ம் ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலுள்ள மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டக்கூடாது என்று சாதியவாதிகளும் மதவாதிகளும் போராடினார்கள். ஆனால், 1972-லேயே சென்னையில் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரியை உருவாக்கியவர் கருணாநிதி. அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவையொட்டி 1990-ல் சென்னை சட்டக்கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சூட்டினார் கருணாநிதி. 1997-ல் இந்தியாவிலேயே முதல் சட்டப்பல்கலைக்கழகத்தையும் அம்பேத்கர் பெயரில் உருவாக்கியதும் அதே கருணாநிதி. ஆனால் அந்தக் கருணாநிதி ஆட்சியில் சுந்தரலிங்கனார் பெயரிலான போக்குவரத்துக்கழகத்தை ஆதிக்கச்சாதியினரால் ஏற்றுக்கொள்ளவைக்க முடியவில்லை என்பதும் வரலாறு.

அரசு என்பது முதல்வருடன் முடிந்துவிடுவதில்லை. போலீஸ் கான்ஸ்டபிள், கிராம நிர்வாக அலுவலர், பேருந்து நடத்துனர் வரை அது விரிந்துபரவியிருக்கிறது. இங்கெல்லாம் நிலவும் சாதியமனநிலை அரசின் முடிவுகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக வரலாற்றில் கொடியன்குளம், வாச்சாத்தி, குண்டுபட்டி, மாஞ்சோலை என்று போலீஸ் வன்முறை எதை எடுத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் காவல்துறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்ததுதான் வரலாறு. ஆதிக்கச்சாதியினரின் மனநிலையைத்தான் காவல்துறையும் பிரதிபலித்துள்ளது. இதைத்தான் ‘கர்ணன்’ படத்தில் வரும் கண்ணபிரான் என்னும் காவல்துறை அதிகாரியும் நிரூபிக்கிறார்.

ஆதிக்கச்சாதியினருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்நிலை அடைவதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அதனாலேயே சாதிய மோதல்களின்போது அவர்களின் கல்விச்சான்றிதழ்களைக் கிழித்துப்போடுவது, குடிசை வீடுகளில் இருந்து ஓட்டு வீட்டுக்கு நகர்ந்தவர்களின் ஓடுகளை அடித்து நொறுக்குவது, டி,வி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை நொறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையும் இதே ஆதிக்க மனநிலையில்தான் அதேமாதிரியான வன்முறையை ஒடுக்கப்பட்ட மக்கள்மீது செலுத்துகிறது என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

தென்மாவட்ட சாதி மோதல்கள்
தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதிமோதல்களைத் தொடர்ந்துதான் அனைத்துச்சாதியினரையும் ஒரே இடத்தில் குடியேற்றும் ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ கருணாநிதி உருவாக்கினார். தி.மு.க.வில் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த விமர்சனங்கள் எழுந்தபோது தலைமைக்குழு தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடராகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்று கட்சிவிதிகளில் திருத்தம் கொண்டுவந்தார். அதுமட்டுமல்ல, யாரைக் கோயில்களுக்குள் நுழையவிடக்கூடாது என்ற நிலை நிலவியதோ அந்த ஆதிதிராவிடரையும் பெண்களையும் அறங்காவலர்குழுவில் கட்டாயம் நியமிக்கவேண்டும் என்ற புரட்சிகர சட்டத்தையும் கொண்டுவந்தவர் கருணாநிதியே. ஆனால் சட்டங்களும் திட்டங்களும் ஓரளவு சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்க உதவுமே தவிர ஒட்டுமொத்த சமூக மாற்றமே சாதி ஒழிப்பைச் சாதிக்கும். அதற்கு ஆதிக்கச்சாதியினரின் மனநிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்ததை கதையின் மையநோக்கத்துக்காக அருகருகே நிறுத்துவதும் புதிது அல்ல. ‘விசாரணை’ திரைப்படத்தில் ‘லாக்கப்’ நாவல் கதையையும் வேளச்சேரி என்கவுன்ட்டர் சம்பவத்தையும் வெற்றிமாறன் இணைத்திருப்பார். இரண்டுமே வெவ்வேறுகாலத்தில் நிகழ்ந்தவை. அதே வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படத்திலும் வரலாற்றுப்பிழைகள் உள்ளன. அசுரனின் கதை நிகழும் திருநெல்வேலியில் பஞ்சமி நிலம் இல்லை. படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பதுபோல் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பஞ்சமிநில மீட்புப்போராட்டத்தில் ஈடுபடவுமில்லை. கீழ்வெண்மணிச் சம்பவம் போன்ற சம்பவத்தையும் அசுரனில் கொண்டுவந்திருப்பார் வெற்றிமாறன். ‘விசாரணை’யின் நோக்கம் மனித உரிமைமீறலைச் சித்திரிப்பது, ‘அசுரன்’ நோக்கம் சாதிய ஒடுக்குமுறையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பது. அதற்கேற்றபடி வெவ்வேறுகாலகட்டத்து சம்பவங்களை இணைத்து கதையாக்கியிருப்பார். இதையேதான் மாரிசெல்வராஜும் ‘கர்ணன்’ படத்தில் செய்திருக்கிறார்.

வரலாற்றைத் திரிப்பதாக மாரி செல்வராஜ் மீது குற்றம் சாட்டுபவர்கள் இந்த நுட்பமான வித்தியாசங்களை உணர்ந்துகொள்வது அவசியம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘கடவுளே…’ கோஷத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

Pagetamil

மகனுடன் சொத்துப் பிரச்சினை: பத்திரிகையாளர்களை அடித்து விரட்டிய நடிகர் மோகன் பாபு

Pagetamil

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

Pagetamil

குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்!

Pagetamil

புஷ்பா 2 Review: பாதியில் அணைந்து போன ‘ஃபயர்’!

Pagetamil

Leave a Comment